$user_name="Jeyakumar";

Saturday, April 29, 2006

தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!

நான் பார்த்த பல வலைப்பதிவுகளில் பார்ப்பனர்க்ளுக்கு எதிரான தாக்குதல்களே அதிகம் இடம் பெறுகிறது. அதாவது தலித் மக்களின் முன்னேற்றதிற்கு தடையாகவும், அவர்களைக்கொடுமைப்படுத்துவதாகவும் இருக்கும் ஒரே இனம், பார்ப்பண இனம் என்று சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் இப்பொது நடக்கும் பாப்பாபட்டி,கீர்ப்பட்டி, கண்டதேவி போன்ற பிரச்சனைகளுக்கும், நேற்று நடந்த மெலவளவு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சாதிக்கலவரங்களுக்கும், முத்துராமலிங்கத்தேவர்காலத்தில் நடந்த தீவைப்பு சம்பவங்கள் (அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று) மற்றும் கீழ்வென்மனி சம்பவங்களுக்கும் இவர்களா காரணம்?.

தலித் மக்கள் எல்லா சாதிக்காரகளாலும் தான் பாதிக்கப்படுகின்றனர். ஏன் அவர்களுக்குள்ளேயே அவர்கள் பாகுபாடு பார்த்துக்கொண்டுதான் இன்னும் இருக்கின்றனர். சில சாதியினர் மறைமுகமாக இவர்களை தாக்குகிறார்கள் என்றால் மற்ற சில சமூகத்தினர் நேரடியாக தாக்குகின்றனர். எப்படி தாக்கினாலும் "அடி அடி தான்!, வலி வலி தான்!"

இதிலிருந்து விடுபட என்னதான் வழி?. சுதந்திரம் வாங்கி , அம்பேத்காரின் போராட்டத்தால் இடஒதுக்கீடு வாங்கி, 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல தலித் தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில் வந்தும் போயிம், இன்னும் மற்ற சமூகத்தினரின் பார்வையில் தலித் மக்கள் தீண்டத்தகாதவர்களாக இருக்கக் காரணம் என்ன? அதைப் போக்கும் வழிதான் என்ன? என்பதை அலசும் ஒரு விவாத மேடையாகக்கூட இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

நான் சிறுவனாக இருக்கும் போது என்னுடைய தாத்தா மிக வருத்தத்துடன் கூறுவார் "சக்கிலியனைத் தொட்டால்தான் தீட்டு!, ஆனால் சாணானை (நாடார்) கண்டாலே தீட்டு! என்று எங்கள் காலத்தில் கூறுவர், ஆனால் இன்று அவர்களின் நிலை மாறிக்கொண்டிருக்கிறது ஆனால் தலித் சமூகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது, உங்கள் காலத்திலேயாவது இந்த நிலை மாறவேண்டும்" என்று.

நாடார் சமூகம் எப்படி முன்னேறியது?.

எனக்கு தெரிந்து, அவர்கள் இடஒதுக்கீடு கேட்டு பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யவில்லை, அரசு எங்களுக்கு என்ன செய்தது என்று அரசிடம் சலுகைகளை கேட்டு பெரிய அளவில் போராட்டம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்புறம் எப்படி அவர்களின் முன்னேற்றம்?.

எனக்கு தெரிந்த சிலரிடன் விசாரித்த போது தெரிந்து கொண்ட சில விசயங்களில் இருந்து, நான் அறிந்து கொண்டது என்னவென்றால். அவர்களில் முன்னேற்றத்திற்கு காரணம், அவர்களிடையே உள்ள ஒற்றுமைதான். அந்த ஒற்றுமையைக்கொண்டு பொருளாதாரத்தில் தங்கள் நிலையை உயர்த்த முற்பட்டனர். பல நாடார் சங்கங்கள் அரசியல் ரீதியாக இல்லாமல் தங்கள் மக்களை ஒருங்கினைத்து பொருளாதார ரீதியாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயன்றது. அதன் பலன் தான் இன்று தென் மாவட்டங்கள் நீங்கள் எங்கு சென்றாலும் பார்க்ககூடிய "நாடார் பள்ளிகள், நாடார் கல்லூரிகள், நாடார் திருமண மண்டபங்கள் , நாடார் தொழிற்சாலைகள்' ஏன் தங்களுக்கு என வங்கிகளே வைக்ககூடிய அளவிற்கு அவர்களின் வளர்ச்சியை நீங்கள் காணலாம். இன்று அவர்களின் வளர்ச்சி தென்மாவட்டங்களில் அரசியல் கட்சிகளை வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கு வந்துள்ளது.

தலித் சமூகம் ஏன் அப்படிப்பட்ட வளர்ச்சியை அடையவில்லை?. தலித் சமுகத்தில் அது போன்ற சங்கங்கள் வந்ததில்லையா? அல்லது தலைவர்களுக்கு தான் பஞ்சம் இருந்ததா?.

அம்பேத்கார் இடஒதுக்கீடு சில வருடங்கள் தான் கேட்டார். ஆனால் இன்று ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும் இடஒதுக்கீடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் தேவையும் அவசியமும் சிலருக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இட ஒதுக்கீடை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த பலரும் இன்னும் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பலர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியடைந்த பின்னர் சாதியைக்குறிப்பிடுவதையே அவமானமா கருதுகின்றனர். ஆனால் சலுகைக்களை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். இதன் தலைவர்களும் எதற்கெடுத்தாலும் அரசாங்கதை குறைசொல்லியும், மற்ற சமூகத்தினரை குறைசொல்லியுமே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். சிலர் தங்களுக்கு, தங்கள் சமூகத்தினரிடையே உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஒருதலைவர் கூட அரசின் உதவியை எதிர்பாராமல், பொருளாதாரத்தில் வளமுடன் இருக்கும் தங்கள் சமூகத்தினரின் உதவியோடு ஒரு சங்கத்தை ஏற்படுத்தி இன்னமும் கிராமத்தில் அடிமை வேலை செய்துகொண்டிருக்கும் தங்கள் மக்களின் வாழ்க்கத்தரதை உயர்த்த சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. கட்சிக்காகவும், போராட்டங்களுக்காகவும், மாநாடுகளுக்காகவும் தம்மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தை வைத்து தன் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை இவர்கள் செய்திருக்கலாம். இதுவரை தங்களுக்கு என ஒரு தரமான பள்ளியைகூட இவர்களால் நிர்மாணிக்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது. தன் மக்கள் இன்னும் பல இடங்களில் அடிமைகளாக, சாப்பட்டிற்கே வழியில்லாமல் இருக்கும் போது, இவர்களின் பணத்தை வைத்து தமிழ் பாதுகாப்பு போராட்டங்களும், விடுதலை புலி ஆதரவு போராட்டங்களும் நடத்திக்கொண்டிருக்கிறார் ஒரு தலைவர். பல சங்கங்களும், அமைப்புகளும் ஆரம்பிக்கும்போது இருந்த நோக்கம் கடைசிவரைக்கும் இருந்ததில்லை.

ஒரு சிலர் கூறுகிறார்கள் "நான் பொருளாதாரத்தில் மிக உயர்வாகத்தானே இருக்கிறேன், ஆனால் இன்னும் என்னை இந்த சமூகம் ஒரு தீண்டத்தகாதவனாகவே பார்க்கிறது" என்று. உண்மைதான்!, ஆனால் இன்னும் உன் சகோதரன் பல கிராமங்களில் அடிமைகளாக தானே இருக்கிறான். உன் சகோதரர்கள் துப்புரவுத்தொழிலாளியாக்கவும், உயர்சாதிக்காரகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களிடன் அடிமைகளாகவும் தானே இருக்கிறான். இன்னும் நீ எதற்கெடுத்தாலும் அரசிடமும், மற்ற சமூகத்தினரிடமும் உதவியும், அனுமதியும் கேட்டு போரடிக்கொண்டேதானே இருக்கிறாய். (உதாரணமாக அரசு வேலைக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்டம் தோறும் ஒரு சம்பிராதயமாகவே நடத்தப்படுகின்றன, ஆனால் பல நல்ல அரசு பதவிகளில் உள்ள படித்த தலித் மக்கள் தங்கள் மக்களுக்கா ஒரு தரமான பயிற்சி வகுப்பைக்கூட நடத்தமுடியவில்லையே). எப்போது மற்றவர்களின் உதவியே, அனுமதியோ தேவைப்படாமல் தங்களால் வாழமுடியும் என்ற சூழ்நிலை உருவாகிறதோ!, தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மற்றவர்களின் அனுமதியின்றி ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என்ற நிலை வருகிறதோ!, அப்போதுதான் இந்த சமூக பேதம் ஒழியும். இன்றைக்கு சாக்கடையாகிவிட்ட அரசியல் ரீதியாக கிடைக்கும் வெற்றிகளும் , சமூக மோதல்களால் கிடைக்கும் வெற்றிகளும். சமூகத்தில் பிரிவினையை அதிகரிக்குமே தவிர, பேத வேறுபாடுகள் குறைக்காது. ஆனால் பொருளாதார அடிப்படையில் கிடைக்கும் தீர்வு , இந்த பேதங்களை ஓரளவுக்கு ஒழிக்கும் என்பது , வரலாற்று நிகழ்வுகளில் இருந்தே நாம் அறியலாம்.

தயவு செய்து எந்த சமூகத்தினரின் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோட நான் எழுதவில்லை. அப்படி ஏதும் இருந்தால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், அதற்கு தூக்கமாத்திரை கொடுத்து உறங்கவத்துக் கொண்டிருக்கும் தலைவர்களிடம் இருந்து விடுபட்டு எழவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இங்கு நான் எழுதியுள்ளேன்.

45 Comments:

At 5:15 AM, Blogger ஜயராமன் said...

ஆழமான சிந்திக்கத்தூண்டும் பதிவு.

தீர்க்கமாக யோசித்து எழுதியிருக்கிறீர்கள்.

தலித்துக்களை ஒரு சேராமல் அவர்கள் நிலை தொடர்ந்து தாழ இருப்பதில் வெளி சாதிக்காரர்கள் பங்கு பல இருந்தாலும், தன் இன ஒற்றுமை குறைவும் ஒரு உண்மை என்று தங்கள் சொல்வதை எல்லோரும் ஆதரிப்பார்கள்.

மேலும் எழுதுங்கள்.

நன்றி

 
At 5:28 AM, Blogger மாயவரத்தான் said...

ம்.. இந்தப் பதிவுக்கு பின்னூட்டங்கள் கண்டிப்பாக பதிவு சம்பந்தப்பட்டதாக வராது என்பது மட்டும் நிச்சயம்.

மற்றபடி இங்கிருக்கும் அனைத்து வாதங்களுமே பலரால் பல இடங்களில் பலமுறை அலசப்பட்டது தான். ஆனால் வாதம் நடந்து கொண்டிருக்கும் போதே சில ஜந்துக்கள் உள்ளே புகுந்து பிராமணர்கள், பிராமணியம் என்று திசை திருப்பி விடும். நிஜத்திலும் நடப்பது அது தானே.

 
At 9:51 AM, Blogger krishjapan said...

சிந்திக்க வைக்கும் பதிவு. இப்படிப்பட்ட பதிவுகள்தான் சமூகம், படித்த நம்மிடம் எதிர்பார்க்கும்.

தாழ்த்தப்பட்ட அச்சமூகத்திலிருந்து முன்னேறிய நண்பர்களிடமிருந்து சில விளக்கங்கள் வந்தால் மேலும் தெளிவு பெறலாம். தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

பதிவினை திசைதிருப்பும் பின்னூட்டங்களை மட்டிறுத்தினால் தவறில்லை என நினைக்கிறேன்.

 
At 10:16 AM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:47 AM, Blogger ஜெயக்குமார் said...

மன்னிக்கவும்!, அனானியின் கருத்து இந்த பதிவின் நோக்கத்தை திசைதிருப்புவதாக உள்ளதால் , அதை அழிக்கவேண்டியதாகி விட்டது.

பதிவைப்பற்றிய ஆரோக்கியமான விவதங்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

 
At 10:57 AM, Blogger நன்மனம் said...

குறுகிய வட்டத்துக்குள் அவர்கள் இருக்கும் வரை தான் அரசியல் வியாதிகள் தங்களை வள படுத்திக்கொள்ள முடியும் என்பது தான் நிதர்சனம். நம் நாட்டில் பழசை சொல்லித்தான் அரசியல் வியாதிகளால் பிழைக்க முடியும், நடப்பு மட்றும் தொலை நோக்கு விடயத்தை சொன்னால் அவர்களால் ஜீவிக்க முடியாது. இது தெரிந்திருந்தும் அதை ஏற்றால் நம்மை வேரு வகையாக பார்ப்பார்களோ என்ற எண்ணத்தினால் பல நல்ல உள்ளங்களும் தங்கள் முகங்களை மூடிக்கொண்டு இந்த அரசியல் வியாதிகளுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள் என்றே தோன்றுகிறது.

 
At 1:48 PM, Blogger துளசி கோபால் said...

நல்ல பதிவு ஜெயகுமார். சிந்திக்கத் தூண்டுகிறது.

 
At 2:00 PM, Blogger ஜெயக்குமார் said...

நன்றி நன்மனம், துளசிகோபால்,
இந்த பதிவிற்கு, மறக்காமல் மதிப்பிடுங்கள். நீங்கள் அளிக்கும் மதிப்புகள், இந்த பதிவை பலரும் பார்க்க, அறிந்துகொள்ள உதவும்.

 
At 2:19 PM, Blogger Unknown said...

நல்ல கருத்துக்கள்.பிடியுங்கள் ஒரு + குத்து

 
At 5:03 PM, Blogger வவ்வால் said...

mm veli natula poi kunthikitu ithu pola tharkam lam yar vena pannalam raasa inge india la vanthu ethuna senju partha therium .... nadaimuraila enna irukunu theriyatha sithantha v(iy)athi ayya neer! lol

 
At 8:50 PM, Anonymous Anonymous said...

வெட்டி ஒட்டாமல் சுயமாக எழுதிய பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பொதுவாக நீங்கள் சொல்வது சரி. எனக்கு சில கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றாலும், தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

இது உங்களின் முதல் சொந்தப்பதிவாதலால் (நான் படித்த), விவாதம் செய்ய விருப்பமில்லை. அடுத்த முறை பார்ப்போம்.

விஜயகுமார்.

 
At 11:11 PM, Blogger ஜெயக்குமார் said...

விஜயகுமார்,

சில பத்திரிக்கைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டால், அது copy & past என்று அர்த்தமல்ல. அந்த செய்தியில் எனக்கு உடன்பாடு இருப்பதலயே அதை நான் வெளியிடுகிறேன்.

நீங்கள அதுபோன்ற பதிவுகளை மட்டுமே பார்த்துள்ளதால், இப்படி கூறியுள்ளீர்கள்.

//eli natula poi kunthikitu ithu pola tharkam lam yar vena pannalam raasa inge india la vanthu ethuna senju partha therium ..//

நம்நாட்டில் நடக்கும் விசயங்கள், உங்களைவிட எனக்கு அதிகமாகவே தெரியும். என்னைச்சார்ந்தவர்கள் எல்லாம் அங்குதான் உள்ளனர்.
பல ஊடகங்கள் வாயிலாகவும் (தமிழ்மணம் உட்பட). தொலைபேசி மூலமாகவும் தினமும் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டுதான் இருக்கிறேன்.

 
At 11:48 PM, Blogger ramachandranusha(உஷா) said...

+ போட்டாச்சு

 
At 11:52 PM, Blogger ENNAR said...

உங்கள் பதிவு நன்றாக உள்ளது
இன்றைக்கு நாடார் ஒருவர் சென்னைக்குச் சென்றால் அவர்களது சங்கத்திலிருந்த கடண் கொடுக்கிறார்கள் அந்த நாடார் அதைப் பெற்று தொழில் செய்துஅந்த கடணைக் கட்டி மறுபடியும் பெற்று கட்டி முன்னுக்க வருகிறார்கள் மற்றவர்களை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத் தான் உள்ளது. இதை 1923லே நாட்டார் ஐயா அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள் நாடார்களைப் பார்த்துக் கத்துக் கொள்ளுங்கள் என்று.

 
At 12:13 AM, Blogger krishjapan said...

ஓரளவுக்கு புதிய தமிழகமும், வி.சி க்களும் முயற்சி செய்ததன. ஆனால், கிருஷ்ணசாமியின் வன்முறை செயல்களும், அவர்களை ஆதரிப்பவர்கள் ஒட்டு மொத்த தேவரின வாக்குகளை இழப்பர் என்ற நிதர்சனமும், தென்பகுதியில் பு.த -ஐத் தனிமைப் படுத்திவிட்டது. வட பகுதியில், சொல்லப்பட்டது போல, தம் இன வளர்ச்சியைப் பார்க்காமல் தமிழைப் பாதுகாக்கப் புறப்பட்டது ஒரு மாபெரும் சறுக்கல். ஒருவேளை, பா.ம.க வுடன் இணக்கமாய் இருக்க அது பயன்பட்டதோ என்னமோ?

சென்ற முறை(2001), புதிய தமிழகம், வி.சிறுத்தைகள் தோல்வி, ஒரு பெரிய பின்னடைவு என்றே கருதுகிறேன். அந்த ஒரு காரணத்துக்காகவே இம்முறை, வி.சிக்கள், அதிக இடங்கள் பெற்று, அவர்கள் ஆதரவு இன்றிமையாததாக அமைய கனவு காண்கிறேன்.

கொஞ்சம் முன்னேறிய தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் தங்களை, இன்னும் முன்னேறாத தம் சமூகத்தினரோடு அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாததும், ஒரு காரணமாய் இருக்குமோ?

 
At 12:25 AM, Blogger தருமி said...

உங்களது சமீபத்திய பதிவுகளின் தாக்கத்தால் உங்கள் பதிவுகளைப் பற்றிய எனது புரிதல் இந்தப் பதிவினால் முற்றுமாக மாறியுள்ளது.பதிவுகளுக்கு ஓட்டுப் போடும் பழக்கமே போயிருந்தாலும் போட்டு விட்டேன் இப்பதிவுக்கு.

மிக நல்ல, பொறுப்பான பதிவு. வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கள் பலவற்றோடும் ஒத்துப் போவதில் மகிழ்ச்சி. ஏற்த்தாழ இதே விஷயங்களை எழுதியும் உள்ளேன்.நிச்சயமாக உங்களின் இந்தப் பதிவு பலரின் கவனத்துக்கு வரும் என்று நம்புகிறேன்.

 
At 12:35 AM, Blogger Bharaniru_balraj said...

ஜாதி வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஜாதி ஒற்றுமை என்பது அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வித்தாக இருக்க வேண்டும். ஓற்றுமையின் பலம்தான் அவர்கள் வங்கியை மீட்டுத்தந்தது. ஒரு காலத்தில் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட சமுதாயம் இன்று பொருளாத ரிதியாக முன்னேறி உள்ளார்கள்.

இதே நிலை தலித் மக்களிடமும் வரவேண்டும். தலித் மக்கள் முன்னேற்றம் பெற ஆற்றல் வாய்ந்த தலைவர்கள் இல்லை. தலித் மக்கள் பிரச்சனையில் தலையிடுவதை, அவர்களோடு பழகுவதை கவுரவ குறைச்சலாகக் கருதக்கூடாது. சக மனிதனாக மதித்தாலே தலித் சமுதாயம் முன்னேற வாய்ப்புகள் உண்டு.

தலித் மாணவர்களை கக்கூஸ் கழுவவும்,மலம் அள்ளவும் நிர்ப்பந்தித்த பள்ளித்தலைமயா(சிரியர்)
பஞ்சாயத்தில் தலித்துக்களை மலம் தின்ன வைத்த ஜாதி வெறி பிடித்த நாய்கள்
தலித் அதிகாரி என்றால் மரியாதை தராத சக அதிகாரிகள்
தலித்தின் வழிநடத்தல் தேவையில்லை என்று தேர்தலை நிறுத்திய
பாப்பாபட்டி,கீரிபட்டி, நாட்டார்மங்கலம் மக்கள்
இதை வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணயம்
கையாலாகத இந்திய, தமிழக அரசு

எல்லோருமே காரணம். மேலும்

ஒரு மத்திய அமைச்சரை ஜாதியைக் காரணம் காட்டி விமானத்திலிருந்து இறக்கிவிட்ட
ஜெயலலிதாவும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் இறக்கிவிட்ட விமான் அதிகாரியும் கூட ஒரு
காரணங்கள்தான்.

இருந்தாலும் எதிர்ப்பைக்காட்ட """முடியாமல்""" கூனிக் குறுகிப்போன அருணாச்சலமும் மிகப் பெரிய
காரணம்.

இவையெல்லாம் தீர
மறுபடி காந்தியோ,
பெரியாரோ, தேவரோ
அம்பேத்கரோ
பிறக்க வேண்டும்.
அதே நேரத்தில்
தலித் தலைவர்கள் ,
தேர்தலுக்குத் தேர்தல்
தங்களை விற்காமல் இருக்க வேண்டும்.

 
At 12:58 AM, Anonymous Anonymous said...

Good post Jeya. The rising of Nadar community is a good example to follow for the other communities too. Continue your good work with such nice posts.

 
At 1:00 AM, Blogger ஜெயக்குமார் said...

//தலித் மக்கள் பிரச்சனையில் தலையிடுவதை, அவர்களோடு பழகுவதை கவுரவ குறைச்சலாகக் கருதக்கூடாது. சக மனிதனாக மதித்தாலே தலித் சமுதாயம் முன்னேற வாய்ப்புகள் உண்டு.//

சரியான கருத்து. முதலில் தலித் ச்மூகங்களிடையே ஒற்றுமை இல்லை. அவர்களுக்குள்ளேயே ஒரு சாதியினர் மற்றவர்களை இழிவாக பேசுவதும், ஒரு சாதிக்காரன் அடுத்த சாதிக்காரனுக்கு பெண் தர மறுப்பதும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
"ஓற்றுமை நீங்கின் அணைவருக்கும் தாழ்வே" என்பதை அவர்கள் உணரவேண்டும். அதற்கு சரியான வழிநடத்துதல் வேண்டும்.

பல தலித் அமைப்புகள் தொடங்கப்படும் போது அவர்களிடம் இருக்கும் நோக்கம் கடைசி வரை இருப்பதில்லை. அதன் தலைவர்கள, தமக்கு தன் மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதை அறிந்த உடனே, அவர்களுக்கு ஒருவிதமான மிதப்பு வந்துவிடுகிறது, அதுவே அவர்களின் நோக்கம் திசைமாற காரணமாகிவிடுகிறது.
இப்படி பலர், தடம் மாறி போயுள்ளனர், சிலர் தடம் தெரியாமலேயே போயுள்ளனர்.

 
At 1:04 AM, Blogger Radha N said...

எல்லோரும் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்துக்கு மாற்றுக்கருத்து உடையவர்களா இருக்க மாட்டார்கள் என்று எண்ணலாமா?

ஜாதி வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் போ துமா? ஏங்க... சக்கரை ன்னு எழுதி நக்கினா இனிக்காதுங்க.....

இங்கே குறைந்தபட்சம் உங்கள்ல எத்தனபேரு, சாதிய ஒழிக்க, குறைந்தபட்சம் எந்த ந டவடிக்கயாவது எடுத்திருக்ங்களா? ( சும்மா கட்டுரை எழுதுறதும்....பிளாக்குல கழட்டுறதும் மட்டும் போதாது!)

சாதியை எப்படி ஒழிக்கலாம்ன்னு கருத்து சொ ல்லுங்க....அந்த கருத்து ஏத்துக்கறமாதிரி இருந்திச்சின்னா...ஒவ்வொருத்தரும், அத அவங்கவங்க குடும்பத்துல இருந்து செஞ்சிகாட்ட ஆரம்பிப்போ ம்...


சாதிங்கறது தொழில் அடிப்படையா உருவாக்கி னது..... இப்போ நாமெல்லாம் எந்ததொழிலும் செய்யத்தயாராயிருக்கும் போது இனிமே என்ன சா தி.... வெங்காய சாதி.....

இதுக்கு மேல இனி இன்னொரு காந்தியோ, பெரியா ரோ பொறந்து வரப்போறாரா.....நாம தாங்க காந்தி....நாம தாங்க பெரியார்.....


நீங்க என்னன்னு சொல்றீங்க?

 
At 1:12 AM, Blogger ஜெயக்குமார் said...

நாகு,

நீங்கள் சொல்லுவது சரிதான், சாதியை முழுவதுமாக ஒழிக்க முடியாதுதான். ஆனால் வேறுபாடுகளை களைய முயற்சிக்கலாமே!. பொருளாதாரத்தில் ஒரு சமூகம் உயரும்போது பேதங்கள் நிச்சயமாக கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.
இதற்கு உதாரணமாகத்தான் நான் இங்கு நாடார் சமுதாயத்தை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

 
At 1:33 AM, Anonymous Anonymous said...

இன்று தமிழகத்தில் நாடார் சமுதாயம் மற்றவர்கள் மதிக்கக் கூடிய நிலையில் இன்று உள்ளது.
ஆனால் 150 வருடங்களுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை.
அப்போது சமுதாயத்தை முன்னேற்ற நினைத்த சமூகப் பெரியவர்கள் ஒரு கூட்டம் கூட்டி
ஒவ்வொறு ஊரிலும் உள்ள நாடார்கள் ஒருங்கினைந்த குழுக்களாக
ஒற்றுமையாகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுவது என முடிவெடுத்தனர். இதன் முதல் முயற்சியாக
ஒவ்வொறு ஊரிலும் நாடார்கள் உறவின்முறை என்ற அமைப்பு ஏற்படுத்த்ப்பட்டது.
பின்னர் அவர்கள் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில் கட்டப்பட்டது.
பின்னர் சில விதிகள் வகுக்கப்பட்டன.
1.அந்த ஊரில் உள்ள நாடார்கள் அந்தந்த உறவின் முறைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
2.எந்தப் பிரச்சினையையும் உறவின் முறையில் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். போலீசுக்குப் போகக் கூடாது.
3.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உறவின்முறை நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படுவார்கள்
4.திருமணமான அனைத்து ஆண்களும் உறவின்முறை வரி செலுத்த வேண்டும்
இப்படிப் பல.
இந்த செயல்பாடுகள் வெற்றியடைந்ததும் பல இணைப்புச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன(விருதுநகர்-சென்னை நாடார்கள் சங்கம்)
இதில் முக்கியமான விஷயம் எதுவெனில் இதில் எந்தச் சங்கமும் அரசியலில் ஈடுபடவில்லை.
சமூக மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டன.
பின்னர் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து 100
ஆண்டுகளுக்கு முன்பே உறவின் முறைகளின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் தற்போது கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு
இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
தொழிலை முன்னேற்ற சில வங்கிகளில் கடன் கேட்ட போது தர மறுத்ததால், தனியாக வங்கி ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டது.

தற்போது உள்ளூருக்குள் மட்டுமே செயல்படும் அந்தந்த ஊருக்கு மட்டுமேயான வங்கிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன். கட்டாயம் நாடார்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். அதில் பணத்தை முதலீடு செய்யலாம், நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவரின் குணம், நன்னடத்தை போன்றவற்றைப் பார்த்து வியாபாரத்திற்கும், அவசரத் தேவகளுக்கும் கடன் அளிக்கப்படும். இந்த முயற்சி அடுத்த 50 ஆண்டுகளில் சமுதாயத்தின் பொருளாதாரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும்

ஆக நாடார்களின் முன்னேற்றம் சில வருடங்களில் ஏற்பட்டதில்லை. அதற்கு 150 வருடங்கள் தேவைப்பட்டது.

இது சாதிப் பெருமையைச் சொல்வதற்காக எழுதப்பட்டது அல்ல. முன்னேற்றத்திற்கு நாங்கள் செய்த வழியைப் பதிவு செய்வதற்காகத்தான்.

திரு.ஜெயக்குமார் அவர்களே, இதனை நீங்கள் அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.

இப்படிக்கு,
ராகவன்.

 
At 1:41 AM, Blogger நன்மனம் said...

இதுக்கு ஒரு தீர்வு இருக்கு, நாம நம்ம தேவைய விரிவு படுத்தாம, நாம வந்த சமூகத்துக்கு, அதன் ஒரு குடும்பத்துக்கு மாதம் படிப்பதற்க்கு என்று ஒரு தொகை ஒதுக்கி செலவு செய்தால் (பணமாக கால் பாதி, நேரடி கட்டணமாக முக்கால் பாதி)நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படுத்த முடியும். அதுவும் டிரஸ்ட் மூலம் இல்லாமல் நேரடி தொடர்பு மற்றும் அவருடைய வளர்ச்சியை கண்காணித்தல் வேண்டும். பல நல்ல மாணவர்கள் சரியான கண்காணிப்பு இல்லாமல் திசை மாறுவது உண்மை.

இதை செய்ய நிறைய பேர் முன் வருவார்கள் என நம்புவோம். சமூக அக்கறை உள்ள பல நல் உள்ளங்கள் இங்கு இருக்கு என்பதை உணர்த்த இது ஒரு வழி.

வேறு வழி தெரிந்தால் மீண்டும் வருகிறேன்.

பி.கு:- இது நான் கண்கூடாக பார்த்த ஒன்று. இது கண்டிப்பாக முடியும், தேவை நல்ல எண்ணம்.

 
At 1:55 AM, Blogger ஜெயக்குமார் said...

திரு ராகவன் அவர்களே,

நாடார் சமூகத்தின் வளர்ச்சி பற்றி நீங்கள் குறிப்பிட்ட விரிவான கருத்துகள் பல சமூகத்தினருக்கு நல்ல பாடமாக இருக்கும். இந்த பதிவில் உங்களுடைய பங்களிப்பிற்கு மிகவும் நன்றி.

 
At 2:10 AM, Blogger ஜெயக்குமார் said...

//அதுவும் டிரஸ்ட் மூலம் இல்லாமல் நேரடி தொடர்பு மற்றும் அவருடைய வளர்ச்சியை கண்காணித்தல் வேண்டும். பல நல்ல மாணவர்கள் சரியான கண்காணிப்பு இல்லாமல் திசை மாறுவது உண்மை.//

தனிப்பட்டமுறையில் செய்யப்படும் உதவிகள், சம்பத்தப்பட்ட நபரின் மேலான நன்றி உணர்ச்சியயையே அதிகரிக்குமே தவிர, சமூகத்தின் மீதான நன்றி உணர்ச்சியாக அது இருக்காது. அதோடு மட்டுமல்லாமல் அது பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தாமால் போய்விடும்.

சேவைமனப்பான்மையுள்ள பலரும் சேர்ந்து ஒரு அமைப்பாக செயல்படும் போது அதன் பலமே தனிதான். இது அவர்களுக்குள்ளேயே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் குறைக்கும்.

 
At 2:53 AM, Blogger குழலி / Kuzhali said...

உங்களின் இந்த பதிவின் நிறைய கருத்துகளுடன் அதிலும் முக்கியமாக தலித் மக்களுக்கிடையே ஒற்றுமை தேவை....

சமூக முன்னேற்றமும் அதே சமயம் அரசியல் உரிமையும் நிச்சயம் தலித்களுக்கு வேண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல், அரசாங்க, அதிகார பலம் இல்லாத எந்த சமூகமும் முன்னேற முடியாது...அதிலும் குறிப்பாக தலித் சமுதாயம் அரசாங்க,அதிகார பலமில்லாமல் முன்னேற முடியாது நாடார் சமூகத்திற்கு காமராசர் காலத்திய மறைமுக அரசியல் பலமும், பெரும் பணக்கார நாடார்களின் பலமும் ஊடக பலமும் மிகப்பெரிய பலம், ஆனால் தலித் சமூகத்தில் இம்மூன்றுமே இல்லை, இது தொடர்பாக நிறைய எழுதலாம், பதிவாக எழுத முயற்சிக்கின்றேன், ஆனால் தலித் தலைவர்கள் துரோகம் செய்கிறார்கள் என்பதை ஏற்க இயலவில்லை, இன்று திருமா, எல்.ஈ போன்றவர்கள் இல்லையென்றால் தலித்களுக்கு இன்றிருக்கும் உரிமைகளும் சுதந்திரமும் கிடைத்திருக்காது, இதற்கு போராடவே அவர்களுடைய முழு பலமும் தீர்ந்துவிடுகின்றது.

மீதியை பதிவில் பேசுவோமே....

 
At 3:39 AM, Blogger நன்மனம் said...

தனி மனிதன் தான் சமுதாயத்தின் தூண். நான் சொல்வது தனி மனித எழுச்சி, அது வர துவங்கினால் நாம் நினைக்கும் சமுதாய எழுச்சி நிச்சயம் வரும்.

மேலும் நாம் எல்லோரும் இங்கு கூறுவதே சமத்துவ சமுதாயத்தை பற்றி தானே. தனி மனித எழுச்சி வரும் போது நிச்சயம் நாம் நினைக்கும் சமத்துவமும் வரும் என்று நம்புவோமாக. நம்பிக்கை தானே வாழ்க்கை.

சேவை அமைப்புகள் அந்த அமைப்பின் வலிமை வாய்ந்த தலைவரின் எண்ணப்படியே வழி நடத்தப்படும் என்பது எண் கருத்து.
அதுவும் சம்பத்தப்பட்ட நபரின் மேலான நன்றி உணர்ச்சியயையே அதிகரிக்கும்.

இப்படியாக தான் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து தடம் புரண்டன.

 
At 3:55 AM, Blogger ஜெயக்குமார் said...

குழலி,

நாடார்களின் வளர்ச்சி, இன்றொ, நேற்றோ நிகழ்ந்தது அல்ல. இந்த பதிவில் பிண்ணூட்டம் இட்டுல்ல அணானியின் பிண்ணூட்டதை படித்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

"பல தலித் அமைப்புகள் தொடங்கப்படும் போது அவர்களிடம் இருக்கும் நோக்கம் கடைசி வரை இருப்பதில்லை. அதன் தலைவர்கள, தமக்கு தன் மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதை அறிந்த உடனே, அவர்களுக்கு ஒருவிதமான மிதப்பு வந்துவிடுகிறது, அதுவே அவர்களின் நோக்கம் திசைமாற காரணமாகிவிடுகிறது."

என்னுடைய இந்த கருத்து, நீங்கள் குறிப்பிட்டுள்ள திருமா-வுக்கும் பொருந்தும். அவரின் எழுச்சி கண்டு நம்பிக்கை கொண்டவன் தான் நான். ஆனால் இன்று அவருடைய கவனம் தமிழ் பாதுகாப்பு, விடுதலைப்புலி ஆதரவு என்று சென்று கொண்டிருக்கிறது. அவருடைய நோக்கம் என்ன என்று சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.

தலித் மக்கள் போட்டியிடவேண்டிய பல கிராமங்களில், தேர்தலை நடக்காததிற்கு என்ன காரணம்? நம்மிடம் அடிமையாக இருந்தவன் நம்மை ஆள்வதா என்ற் எண்ணம்தானே. அந்த எண்ணத்தை எப்படி மாற்றுவது. முதலில் தலித்மக்களிடன் அந்த அடிமை எண்ணத்தை மாற்றவேண்டும். பொருளாதார ரீதியாக அவர்கள் மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலை மாறவேண்டும்.

நகரத்தில் ஓரளவுக்கு வசதியுள்ள தலித் மக்கள், அரசின் பெரும்பாலான சலுகைகளை அனுபவித்து கொண்டிருப்பதால், அவைகள் கிராமத்தில் வறுமையில், அடிமைப்பினியிலும் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு கிடைக்காமல் போகிறது.
உதாரணமாக நகரத்தில் உள்ள ஒரு தலித் மாணவனால் அங்கு உள்ள வசதிகளைப் பயன்படுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், அவன் அரசின் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை பெற்று மேலும் தன்னை வளர்த்துக்கொள்கிறான். அதனால் உண்மையிலேயே இந்த சலுகை தேவைப்படுகிற கிராமத்து தலித் மாணவனுக்கு அது கிடைக்காமல் போகிறது. அவனால் ஒரு நிலைக்கு மேல் தன் படிப்பை தொடரமுடியாமல் போய்விடுகிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றால் அரசியல் ரீதியாக மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாகவும் தலித் மக்களை முன்னேற்ற வலுவான, சமுதாய அக்கரையுள்ள ஒரு அமைப்பு உருவாக வேண்டும். அதற்கு நல்ல நிலையில் உள்ள அணைத்து தலித் உள்ளங்களும் ஆதரவு தரவேண்டும்.

 
At 6:31 AM, Blogger முத்துகுமரன் said...

ஜெயகுமார்,

உங்கள் மற்ற பதிவுகளோடு ஒப்பிடும் போது இது சிறப்பானதொரு பதிவு. குழலி குறிப்பிட்டதைப் போல நாடார் சமூகத்தோடு ஒப்பிடுகையில் தலித் சமூகம் அதிகார அரசு, ஊடக பலமின்றியே இருக்கிறது. திருமா மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கவனிக்கப்படும் தலைவர்களாகியிருக்கிறார்கள். ஆனால் டாக்டர்.கிருஷ்ணசாமி மக்களோடு கலக்காமல் ஒரு அதிகாரத் தோரணையில் வலம் வருவாதேலே சிறப்பானதொரு எழுச்சியை ஏற்படுத்த முடியவில்லை.

திருமாவளவன் தலித் மக்களுக்காக போராடாமல் தமிழ் பாதுகாப்பு, விடுதலைப்புலிகள் ஆதரவில் கவனம் செலுத்துகிறார் என்று கூறியிருக்கிறீர்கள்(ஆதங்கப்பட்டிருக்கிறீர்கள்). அவருடைய பேச்சுகளையும், கட்டுரைகளை வாசித்திருந்தால் அவரின் நிலைப்பாடு புரிந்திருக்கும்.

தமிழ்மொழி, தலித் சமூகம் இரண்டும் வேறுவேறான தளங்கள் அல்ல. ஒன்னோடொன்று இணைந்த தளமே. சமூகத்தில்(தமிழகத்தில்) ஒடுக்கப்பட்ட மக்களாய் இருக்கும் இருக்கும் தலித்துகளின் மொழி தமிழ். தமிழ்ப்பாதுகாப்பு என்னும் போது அது தலித் பாதுகாப்பு என்பதும் உள் இருக்கிறது. தமிழின் கலாச்சரம், பண்பாடுகளை பாதுகாப்பது என்பது தலித்துகளின் கலாச்சாரம் பண்பாடுகளை பாதுகாப்பது என்றே இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் அவரது இயக்கம் இருக்கிறது.
** இங்கு தமிழ்மொழியை நீக்கிவிட்டு எந்த மொழியைப் பயன்படுத்தினாலும் அந்தந்த பிராந்தியங்களுக்கு பொருந்தியே வரும். தமிழ் மொழி என்பதை ''மொழி'' என்று பொதுமைப்படுத்தியும் வாசிக்கலாம்**

ஆண்டாண்டு காலமாக மோதல் நடைபெற்று வரும் ஆதிக்க சாதிகளோடு ஒரு பொதுப்புள்ளியில் இணைய தமிழ் பாதுகாப்பு என்பது உதவியிருக்கிறது. தலித் மக்களின் விடுதலை கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதார முன்னேற்றத்தில் இருக்கிறது. அதே சமயம் மற்ற சமூகங்களுடன் இருக்கும் முரண்களை களைய அங்கிருக்கும் ஜனநாயக சக்திகளோடு உறவாடுவதும் அவசியமாயிருக்கிறது. அதுதான் வட மாவட்டங்களில் இப்போது நடந்திருக்கிறது.

தேர்தல் அரசியலில் ஈடுபடும் பொது செய்யும் சில நடவடிக்கைகளுக்காக அவரின் அடிப்படையான நோக்கம் மாறவில்லை.

தேர்தல் அரசியலில் நாகரீகம் என்பது மிக கீழ்த்தரமாக போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில் ராமதாஸ்-திருமாவளவனின் இந்த பண்பாடான அணுகுமுறை( ஆனால் பல சமதர்ம சிந்தானாவாதிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் தரும் அணுகுமுறை) ஏற்பட்டிருக்க வாய்ப்பாக அமைந்தது அவர்கள் தமிழ்பாதுகாப்பு இயக்கத்தில் இயங்கிய போது ஏற்பட்ட புரிதல்தான்.

முன்னேற்றம், சமூக நல்லிணக்கம் என்பது ஓரிரவில் நடக்க கூடியது அல்ல.

நன்றி நண்பரே.

 
At 10:20 AM, Blogger ஜெயக்குமார் said...

//
முன்னேற்றம், சமூக நல்லிணக்கம் என்பது ஓரிரவில் நடக்க கூடியது அல்ல.//

ஆனால் அதற்கான படிகளே இங்கு முறையாக கட்டப்படவில்லையே. நீங்கள் வடமாவட்டங்களி குறிபிடுகிறீர்கள். ராமதாஸ்- திருமாவளவன் கூட்டணியை குறிப்பிடுகிறீர்கள். இப்போது தொகுதி உடன்பாட்டிலேயே உதவி செய்யாத ராமதாஸா, திருமா-வை புறம்தள்ளிய திமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில் தலித்துகளுக்காக போராடப்போகிறார்.

// தமிழின் கலாச்சரம், பண்பாடுகளை பாதுகாப்பது என்பது தலித்துகளின் கலாச்சாரம் பண்பாடுகளை பாதுகாப்பது என்றே இருக்கிறது.//

ஆனால் இவற்றையெல்லம் தமிழ் சினிமா தலைப்புகளில் அல்லவா தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு சாப்பாட்டிற்கே வழியில்லை, ஆனால் சினிமா பார்ப்பதற்கு காசு இல்லை என்று கவலைப்படுவதுபோல உள்ளது.

சில வருடங்களுக்கும் முன் தன் இயக்கத்தின் செல்வாக்கை காட்ட , பல் கோடி ரூபாய் செலவு செய்து சென்னையில் ஒரு பிரமாண்ட மாநாடை நடத்தினார் திருமா. அதனால் விளைந்தது என்ன?. கோடிக்கணக்கில் செலவு மட்டுமே. திருமா வேண்டுமானால் புகழ் அடைந்திருக்கலாம். ஆனால் ஒரு கடைக்கோடி கிராமத்தில் உள்ள தலித்தின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

 
At 1:16 AM, Blogger ஜெயக்குமார் said...

//+ போட்டாச்சு//

மன்னிக்கவும் உஷா,
பதிவை திசைதிருப்பும் சில பிண்ணூட்டங்களை நான் வெளியிடாமல் வைத்திருந்ததால், ஒரு வரியில் இருந்த உங்கள் பிண்ணூட்டம் என்னால் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.

 
At 2:20 AM, Anonymous Anonymous said...

பல சாதிகளாக பிரிந்திருக்கும் தலித் சமூகத்தில், இது போன்ற அமைப்புகள்
சாத்தியமாவது கடினம் என்றாலும். அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும், தங்களுக்குள் இது போன்ற ஒரு வலுவான அமைப்பை தோற்றுவிக்கமுடியும். அதற்கு தொலைநோக்கு பார்வை கொண்ட நல்ல தலைவர்கள் தேவை.

பொருளாதார முன்னேற்றமே, சரியான தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஒற்றுமையிலும், பொருளாதாரத்திலும் உறுதியாக இருந்தால், அரசியல் கூட எளிதில் சாத்தியமாகும் என்பதும் உண்மை.

 
At 2:49 AM, Blogger ப்ரியன் said...

நல்லதொரு கட்டுரை ஜெயா...வாழ்த்துக்கள்...இதே மாதிரி தொடருங்கள்...

வோட்டில் ஒரு + சேர்ந்திருக்கும் பாருங்க

 
At 2:58 AM, Blogger Muthu said...

ஜெயகுமார்,

உங்களிடம் இருந்து இப்படி ஒரு உருப்படியான பதிவை எதிர்பார்க்கவில்லை...இது போலவே எழுதுங்கள்....

மற்றபடி நாடார்கள் முன்னேறிய அதே வழியை தலித் மக்கள் பின்பற்றமுடியுமா...

(இந்த மக்களின் ஜனத்தொகை என்ன? அவர்களின் ஜனத்தொகை என்ன? அவர்களில் எவ்வளவு பேர் பணம் உள்ளவர்கள் என்றெல்லாம் பார்க்கவேண்டும்..

ஆயினும் உருப்படியான பதிவு..

 
At 2:59 AM, Blogger Muthu said...

//பலர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியடைந்த பின்னர் சாதியைக்குறிப்பிடுவதையே அவமானமா கருதுகின்றனர். ஆனால் சலுகைக்களை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர்//

இது நிதர்சனம்..நான் ரசித்த வரி...

 
At 3:35 AM, Blogger ஜெயக்குமார் said...

//(இந்த மக்களின் ஜனத்தொகை என்ன? அவர்களின் ஜனத்தொகை என்ன? அவர்களில் எவ்வளவு பேர் பணம் உள்ளவர்கள் என்றெல்லாம் பார்க்கவேண்டும்..//

முத்து,
எந்த சமூகமும், உருவாகும் போதே பணத்துடனும், சனத்துடனும் உருவாவதில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

 
At 3:44 AM, Anonymous Anonymous said...

//எந்த சமூகமும், உருவாகும் போதே பணத்துடனும், சனத்துடனும் உருவாவதில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.//

இதற்கு உதாரணம், 20 வருடங்களுக்கு முன்பு இருந்த மாறன் குடும்பமும். இப்போது இருக்கும் மாறன் குடும்பமும்.

 
At 4:59 AM, Blogger ஜெயக்குமார் said...

நேற்று இந்த பதிப்பு நல்ல மதிபெண்களுடன் "வாசகர்" பரிந்துரைப்பகுதியில் இருந்தது. ஆனால் இன்று தலைகீழ்.

எதிர்மறையாக மதிபெண்கள் வழங்குவோர். அதற்குரிய காரணங்களையும் பிண்ணோட்டமாக விட்டுச்சென்றால். நம் எண்ணங்களைத் தெளிவு படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும்

 
At 5:30 AM, Blogger Muthu said...

//எந்த சமூகமும், உருவாகும் போதே பணத்துடனும், சனத்துடனும் உருவாவதில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு//

if you think practically you have to take all into account..that is what i said...

மாறன் குடும்ப உதாரணம் சூப்பர் அனானி...

 
At 5:30 AM, Blogger Muthu said...

//எந்த சமூகமும், உருவாகும் போதே பணத்துடனும், சனத்துடனும் உருவாவதில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு//

if you think practically you have to take all into account..that is what i said...

மாறன் குடும்ப உதாரணம் சூப்பர் அனானி...


(-) குத்து போடறவங்க காரணம் சொல்வாங்களா என்ன)

 
At 7:42 AM, Blogger dondu(#11168674346665545885) said...

நாடார்களின் உதாரணம் பின்பற்றத் தக்கது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முக்கியமாக தலித்துகளுக்கு சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம். அதற்குத்தான் முதல் அடியாக இரட்டை டம்ளர் முறை செயல்படுத்தும் டீக்கடைகளைப் புறக்கணிக்க ஆலோசனை கூறி போன வருடமே பதிவு போட்டு சமீபத்தில்தான் மீள் பதிவும் செய்தேன். பின்னூட்டங்களுடன் பார்க்க http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html

தலித்துகள் அதிகாரிகளாக வந்தாலும் மரியாதை கிடைப்பதில்லை என்றும் பார்க்கிறோம். இதுவும் கொடுமையே. அதற்கு என்ன செய்யலாம் என்பதற்காகக் நான் அளித்த யோசனை இந்தப் பதிவு. இதுவும் போன ஆண்டு போடப்பட்டு இவ்வாண்டு மீள் பதிவு செய்யப்பட்டது. பின்னூட்டங்களுடன் பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_26.html

அதர் மற்றும் அனானி போன்ற அபாயகரமான ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால் இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண்பிக்கும் வகையில் இதை என்னுடைய இந்தத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_26.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 1:36 AM, Blogger Mahadev said...

This may very late comment for this post.
First of all, congrats for choosing a appro. topic when Election around the corner and Central Govt announ. more reservation for SC/ST.
Good thoughts. Very less people like you think about Tamilnadu(or their native town) after going to Countries like UK.I dont know how do you manage [for which company you are working ? :)]

ok ,here are my useful comments.

1) I totally agree that "BRAHMINS" is NOT the only people who are against SC/ST.It happened before 100 years in our Grandparents years. Now, brahmins themselfs are like a miniority community. In all tamil movies and magazines brahmins are targetted as jokers now.So NO point in blamming that community.

2) Second I would like to join hands with you in your view of SC/ST should stop begging the Govt for all the reservation.They should start fight back with intelligence. This can happen only when educated /employed people in their community co-operate.
3) I dont think "Nadar" community is a great sample.I agree that they grown from no-where to a group which decidies few M.L.A's. But its all happened because they got a very strong family business with them. If you take all "stell" "Groceries" will be by nadar's guys. Since economy improved all the people start using the groceris very well it become a great business and nadar community improved .So, I dont know which business this community can choose to improve.
3)Primary education will be the key issue.
I want to write more and more..If you allow my this first post.

- Karthi

 
At 12:40 PM, Anonymous Anonymous said...

அரசு பொறியியற் கல்லூரிகளில் ஆசிரியப்பணி -- பட்டியலினத்தவருக்கு ஒரு கனவா?

அன்பின் தோழனுக்கு,
வணக்கம், வாழிய நலம், தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆசிரியப்பணியிடங்கள் நிரப்புதல் அரசு பொறியியற் கல்லூரிகளில் என்பது பட்டியலினத்தவரைப்பொறுத்த வரை ஒரு கண்துடைப்பு என்பது பெரும்பாலோருக்கு தெரியாத ஒரு விசயம், எப்படி என்று கேட்கின்றீர்களா? முன்னேறிய வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒரே அளவில் சமத்துவத்தினை நிலைநாட்டி சரித்திரத்தில் இடம் பெற நினைக்கின்றது தமிழக அரசு. அரசு பொறியியற் கல்லூரிகள் ஆசிரியர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆசிரியப்பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டிய அறிவிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒரு பெரிய அநீதி இழைத்துள்ளது, மத்திய அரசிலும் மற்றைய மானில அரசுகளிலும் அரசுப்பணிகளுக்கான குறைந்த பட்ச தகுதியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகளுக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இருக்கின்றது, ஆனால் தமிழக அரசு தேர்வாணையத்தில் மட்டுமே , முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு பெரிய தடைகல்லை போட்டு பட்டியலினத்தவரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு மேல்தட்டு வர்கத்தினருக்கு வசதி செய்து கொடுத்துள்ளது இந்த அரசு.

இதனால் தகுதியோடு இருக்கும் எத்தனையோ தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கின்றனர், தமிழ் போதனாவழிக்கல்வியில் பயின்று விட்டு அந்த மிரட்சி தீர்வதற்குள் இறுதியாண்டு கல்லூரிப்படிப்பையும் முடிக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவன், முதல் நிலையில் தேர்ச்சியுறுவான் என்று எந்த நிச்சயமும் இல்லை, ஆனால் அதனால் மட்டுமே அவன் அறிவற்றவன் அவன் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? , மத்திய அரசிலும் மற்ற மானில அரசுகளிலும் அளித்திருக்கும் சலுகையினைப்போல் தேர்வெழுத அந்த மாணவனை அனுமதிக்கலாமே? அதில் அவன் திறமையை காண்பித்து ஒரு தலை சிறந்த ஆசிரியனாக வர வாய்ப்புகள் உண்டு அல்லவா? அந்த வாய்ப்பினை தட்டிப்பறிக்கின்றதா தமிழக அரசு?

இதனால் பாதிக்கப்படுவது முற்றிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களே, முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் அனைவரும் அறிவாளிகள், இரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் எல்லாம் முட்டாள்கள் என்பது போலல்லவா உள்ளது இந்த நியாயம்? அவர்களுக்கும் ஒரு வாய்ப்பினை இந்த அரசு அளித்துப்பார்த்தால் தானே தெரியும்? அதிலும் எத்தனை அறிவாளிகள் உள்ளனர் என்று? சமூக நீதி, சமூக நீதி என்று சத்தம்போட்டுக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே? இதை யாரேனும் கவனிப்பீரா? பொறியியல் கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற தடையை நீக்க்கி தேர்ச்சிமட்டுமே பெற்றிருந்தாலே அவர் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர் என்று ஒரு வாய்ப்பினை அனைத்து தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்திற்கும் வழங்கி பெருமை தேடிக்கொள்ளுமா இந்த மானில அரசு? அவர்களை நேரடியாக பதவி தரச்சொல்லி கேட்கவில்லை, விண்ணப்பித்து அவர்களின் தகுதியை நிலைநாட்ட ஒரு வாய்ப்பினை மட்டுமே கேட்கின்றனர் அவர்கள், அரசு இந்த விசயத்தில் எந்த அளவிற்கு செயல்படுகின்றது என்று கவனிப்போம், இணையத்தில் எழுதும் இந்த எழுத்து அரசாங்கத்தினை சென்றடையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...வாழ்க வளமுடன்,
சமூக அக்கரையுடன்,
ஒரு சேவகன் ...

 
At 4:15 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நேர்மை சரியாகவுமிருக்கிறது.

 
At 6:15 AM, Blogger k selvaprabhu said...

தலித்; எப்போது உருவானான், யாரால், இற்றைய நிலையடைய எத்தனை ஆண்டுகள் பிடித்தன. தனக்கு ஓர் ஆள் வேண்டும் எடுபிடி வேலை செய்ய குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு சேவை செய்யவேண்டும். கொடுக்கும் ஊதியம் மீதம் ஆகக்கூடாது இது தகர்ந்து வருகிறது காரணம் அவர்களின் கல்வி தரம், அவர்கள் பள்ளி செல்ல யார் காரணம், எந்த வருடமுதல் ப்ள்ளிசெல்ல ஆரம்பித்தனர்,பார்பார் தாம் வகுத்த அநீதியின் அளவுகோள் தான் சாதி,அதன் அடிப்படையே தமிழ் என்ற மொழி அடிப்படையில் யாரும் ஒன்றுபடக்கூடாது, ஒன்றுபட வர்ணாசிரம் விடாது . சாதி என்ற சொல் தமிழில் இல்லை. ஆனால் சதியின் உட்கட்டுமாணம் வளிமைவாய்ந்தது, பிணத்திற்க்கும் சாதி உள்ளது , அந்த சாதியை விட்டு வெளிவர யாருக்கு துணிவுள்ளது

 

Post a Comment

<< Home