$user_name="Jeyakumar";

Monday, December 18, 2006

மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள ரஜினி வாய்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது எதையாவது பேசி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், சமீபத்தில் அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிக்கிறது. நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கும் ‘சொல்லி அடிப்பேன்’ என்ற படத்தின் ஆடியோ கேசட் விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, ‘‘விவேக் அரசியலும் பேசுவார், ஆன்மிகமும் பேசுவார், கம்ப்யூட்டர் பற்றியும் தெரியும், பூகோளம் பற்றியும் தெரியும். இவ்வளவு அறிவு ஜீவியான விவேக் ஒரு பிராமணராக இருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது’’ என்று ஆச்சரியப்பட்டுப் பேசியிருந்தார்.

விவேக் பற்றி ரஜினி கூறியுள்ள இந்த கமெண்ட்தான் பெரும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. தேவர் இனத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவரை பிராமணர் என்று சொல்லியதன் மூலம் ஒட்டுமொத்த தேவர் இனத்தையே ரஜினி அவமானப்படுத்திவிட்டார் என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசினார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனரான டாக்டர்சேதுராமன். ‘‘தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த விவேக் பற்றி ரஜினிகாந்த் பேசியிருப்பது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது. தேவர் இனத்தில் மட்டுமின்றி எல்லா சமுதாயத்திலும் அறிவாளிகளும், நல்லவர்களும் இருக்கிறார்கள். அதுபோல் பிராமண சமுதாயத்தில் வன்முறை எண்ணம் கொண்டவர்களும், முட்டாள்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் ரஜினி.

யதார்த்தம் இப்படியிருக்க... தேவர் இனத்தை இழிவுப்படுத்துவது போல அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ரஜினி வெறும் நடிகர் மட்டுமல்ல. ரஜினியின் வாய்ஸ§க்கு இன்னமும் ஒரு மதிப்பிருப்பதால்தான் அவர் கூறியிருப்பதைக் கண்டிக்கிறோம்.

இதுபோன்று அறியாமையால் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசும் பழக்கத்தால்தான் அவரால் அரசியலில் நுழையக்கூட முடியவில்லை. தேவர் சமுதாயத்தின் பெருமையைப் பற்றித் தெரியாத ரஜினிக்கு, சில விஷயங்களைச் சொல்லிக்காட்டுகிறேன். விவேகானந்தரை சிகாகோவிற்கு அனுப்பிப் பெருமை சேர்த்தது நம் தேவர்தான். முதன்முதலாக தமிழ்ச் சங்கத்தை நிறுவிய வள்ளல் பாண்டித்துரையும் ஒரு தேவர்தான். எல்லா சமுதாய மக்களும் ஒரு தாய் மக்களே என்று குரல் கொடுத்து, அரசியல் புரட்சி செய்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரய்யா பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? இப்படி தமிழகத்திற்கும், இந்தச் சமுதாயத்திற்கும் எண்ணிலடங்கா சேவைகளைச் செய்த தேவர் இனத்தைக்
கொச்சைப்படுத்திவிட்டார் ரஜினி.

தென்பாண்டி மண்டலங்களில் பல கோயில்களையும், கோட்டைகளையும் கட்டிய பரம்பரை, தேவர் பரம்பரைதான். நம்மை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையனை வீரத்தோடு எதிர்த்தவர்களில் தேவர்கள்தான் அதிகம். இன்றைக்கும் கல்வியில் சிறந்த பலர் தேவரினத்தில் இருக்கிறார்கள். என்னைப் போன்றவர்கள்கூட கல்வியில் 17_க்கும் மேற்பட்ட தங்க மெடல்கள் வாங்கியிருப்பது, அந்த கோடம்பாக்கத்திற்கு எப்படித்தான் தெரியாமல் போனதோ?

புத்திசாலி என்றால் பிராமணர் என்றும், தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரா இப்படி வளர்ந்திருக்கிறார் என்று வியந்தும் பேசி, தேவர் சமுதாயத்தை மட்டம் தட்டிப் பேசியிருப்பதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் சமுதாய இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு போயஸ்கார்டனிலுள்ள ரஜினியின் வீட்டுக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது.

இதையெல்லாம் தாண்டி அந்த மேடையில் ரஜினி பேசியதற்கு எங்கள் உறவினர் விவேக் உரியமுறையில் பதில் தெரிவிக்காததும் கண்டிக்கத்தக்கது. சரி... இவர்தான் சொல்லவில்லை. அந்த விழாவில் நடந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, இதே சமுதாயத்தைச் சேர்ந்த பாரதி ராஜா, வைரமுத்து போன்றவர்கள் கூட எதுவும் சொல்லாதது வருத்தமாகத்தான் இருக்கிறது!’’ என்று ஆவேசமும், ஆதங்கமுமாகப் பேசி முடித்தார் டாக்டர் சேதுராமன்.

ரஜினியின் வாய்ஸ் என்றாலே சர்ச்சை என்று மறுபடியும் நிரூபணமாகியுள்ளது!

--நன்றி குமுதம்